search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை கடத்தல் பீதி"

    குழந்தை கடத்தல் பீதியில் மூதாட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில் கிராம மக்களால் தாக்கப்பட்ட சென்னை கார் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Childkidnapping

    போளூர்:

    சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்தவர் ருக்குமணியம்மாள் (வயது 65). இவர் தனது உறவினர் வெங்கடேசன், அவரது மருமகனும் கார் டிரைவருமான கஜேந்திரன் (35). மலேசியா உறவினர்கள் மேகான்குமார், சந்திரசேகர் ஆகிய 5 பேரும் கடந்த மே மாதம் 9ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் போளுர் அடுத்த அத்திமூர் தம்புகொட்டான்பாறை அருகில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு வந்தனர்.

    அப்போது அவர்கள் குழந்தை கடத்த வந்தவர்கள் என தவறாக கருதி கிராம மக்கள் அவர்களை துரத்தி தாக்கினர்.

    இதில் மூதாட்டி ருக்குமணி சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற 4 பேரும் படுகாயமடைந்தனர். அவரிகளில் கார் டிரைவர் கஜேந்திரன் என்பவர் தொடர்ந்து கவலைகிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    கடந்த 3 மாதமாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கஜேந்திரன் நினைவு திரும்பாமலேயே நேற்று மாலை உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரது உடல் சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    போளுர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் சென்னைக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக போளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 45 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பலரை போலீசார் தொடர்ந்து தேடிவருகின்றனர்.

    மேலும் சிறையில் அடைக்கப்பட்ட அனைவரும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டு தற்போது போளுர் போலீஸ்ஸ்டேசனில் தினமும் கையெழுத்து போட்டு வருகின்றனர்.

    சம்பவம் நடந்து 3 மாதம் கடந்தும் இந்த வழக்கு தொடர்பாக இது வரை குற்றபத்திரிக்கையும் தாக்கல் செய்யபடவில்லை. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 73 பேரையும் தேடிவருவதாக போலீசார் தெரிவித்து வருகின்றனர்.

    அரசின் திட்ட கணக்கெடுப்பு பணிக்காக வந்த 7 வாலிபர்களை, குழந்தை கடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் சுற்றி வளைத்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவாரூர்:

    தமிழகம் மற்றும் வடமாநிலங்களில் குழந்தை கடத்தல் பீதி ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தேகப்படி செல்லும் நபர்களை பொதுமக்கள் தாக்கி கொல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. குழந்தை கடத்தல் குறித்து பொதுமக்கள் வதந்தியை நம்ப வேண்டாம் என்று போலீசார் கூறி வருகிறார்கள்.

    இந்த நிலையில் அரசின் திட்ட கணக்கெடுப்பு பணிக்காக வந்த 7 வாலிபர்களை, குழந்தை கடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் சுற்றி வளைத்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சத்தியமூர்த்தி (23), யுவனேஸ்வரன் (24), முத்துசாமி (24), பிரேம்குமார் (24), மணிகண்டன் (38), ஜஸ்டின் (24).

    இந்த நிலையில் இவர்கள் 6 பேரும் திருவாரூர் மாவட்டத்தில் அரசின் இலவச ஆடு, கோழி ஆகியவற்றுக்கு கொட்டகை அமைத்து கொடுப்பதற்கான டெண்டர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக அதிகாரிகள் ஒப்புதலோடு பல்வேறு இடங்களில் அவர்கள் சென்று கொட்டகை அமைக்க கணக்கெடுப்பு பணியை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று கூத்தாநல்லூர் அருகே கமலாபுரம் பகுதியில் சத்திய மூர்த்தி உள்பட 6 பேரும் கணக்கெடுப்பு பணிக்கு சென்றுள்ளனர். இவர்களுடன் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியை சேர்ந்த டிரைவர் அய்யப்பன் (42) என்பவரும் சென்றிருந்தார்.

    கணக்கெடுப்பு பணியை முடிந்த இவர்கள் 7 பேரும், அங்குள்ள ஒரு டீக்கடையில் டீ சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்ற சிலர், நீங்கள் யார்? வெளியூர்காரர்கள் போல் தெரிகிறதே? இங்கு என்ன வேலை? என்று கேட்டுள்ளனர். ஆனால் இதற்கு அவர்கள் சரியான பதிலை கூறாமல் இருந்தனர்.

    இதனால் அவர்கள் 7 பேரும் குழந்தை கடத்தல் கும்பலாக இருக்குமோ? என்று கிராம மக்களுக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து சிலர், சத்தியமூர்த்தி உள்பட 7 பேரையும் சுற்றி வளைத்து கைகளால் மற்றும் கட்டைகளால் சரமாரியாக தாக்கினர்.

    இதை கண்ட சிலர், இந்த சம்பவம் பற்றி வடபாதி மங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து , 7 வாலிபர்களையும் மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் போலீசார் , அந்த வாலிபர்களிடம் விசாரித்தனர். மேலும் திருவாரூர் கலெக்டர் அலுவலக அதிகாரிகளை போலீசார் தொடர்புகொண்டு விசாரித்தனர். அப்போது 7 வாலிபர்களும், கணக்கெடுப்பு பணிக்காக அனுப்பப்பட்டவர்கள் என்பது உறுதியானது. இருப்பினும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.


    போளூரில் மூதாட்டி கொலை சம்பவத்தை தொடர்ந்து அத்திமூர், களியம் உள்ளிட்ட சுமார் 10 கிராமங்களில் ஒரு மாதத்திற்கு பிறகு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த அத்திமூர், களியம் கிராமத்தில் சென்னையில் இருந்து சாமி கும்பிட கோவிலுக்கு சென்றவர்களை கடந்த மே மாதம் 9-ந்தேதி குழந்தை கடத்தல் கும்பல் என கருதி கிராம மக்கள் அடித்து உதைத்தனர்.

    இதில் சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்த ருக்மணி (வயது 65) என்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் உடன் வந்த உறவினர்களான மோகன்குமார், சந்திரசேகரன், கஜேந்திரன், வெங்கடேசன் ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின்பேரில் போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னராஜ், இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்பாபு (போளூர்), ராஜகோபால் (கலசபாக்கம்), சுரேஷ்சண்முகம் (கடலாடி) மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் தயாளன், சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் இரவு பகலாக கிராமங்களில் தேடுதல் வேட்டை நடத்தி 62 பேர் மீது வழக்கு பதிவு செய்து, 44 பேரை கைது செய்தனர். மீதமுள்ள 18 பேரை கைது செய்ய போலீசார் தீவிரமாக உள்ளனர்.

    போலீசாருக்கு பயந்து தம்புகொட்டான்பாறை, ஜம்பங்கிபுரம், காமாட்சிபுரம், கணேசபுரம், களியம், அத்திமூர், பனப்பாம்பட்டு, அண்ணாநகர், திண்டிவனம் உள்பட 10 கிராம மக்கள் தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் சென்று தலைமறைவாகி விட்டனர்.

    சிலவீடுகளில் பெண்கள் மட்டுமே இருந்தனர். கடைகள் திறக்கப்படவில்லை. விவசாய பணிகள் முடங்கியது. பஸ்கள் பயணிகள் இன்றி சென்றன. அந்த கிராமங்கள் தொடர்ந்து போலீசாரின் கண்காணிப்பில் இருந்தன.

    தற்போது படிப்படியாக வெளியூர் சென்ற கிராம மக்கள் ஊர் திரும்பி வருகின்றனர். கடைகள் திறக்கப்பட்டுள்ளன. விவசாய வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஒரு மாதத்திற்கு பிறகு இந்த கிராமங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது.




    குழந்தை கடத்தல் பீதி நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் தற்போது, அசாமிலும் 2 சுற்றுலா பயணிகளை கிராம மக்கள் அடித்து கொன்றுள்ளனர். #childkidnappingpanic

    கவுகாத்தி:

    குழந்தை கடத்தல் பீதி நாடு முழுவதும் பரவி வருகிறது. இதனால் அப்பாவிகள் பலர் அடித்து கொல்லப்பட்டு வருகின்றனர். தொடக்கத்தில் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திராவை தொடர்ந்து இப்பீதி வட இந்தியாவில் பரவியது.

    தற்போது வடகிழக்கு மாகாணங்களையும் ஆக்கிரமித்துள்ளது. மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் குழந்தைகளை கடத்தும் ஒரு கும்பல் நடமாடுவதாக ‘வாட்ஸ் அப்’பில் பீதி பரவியது.

    இந்த நிலையில் கவுகாத்தியை சேர்ந்த நிலோத் பால்தாஸ், அபிஜீத் நாத் ஆகிய 2 பேர் கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதிக்கு சுற்றுலா சென்று இருந்தனர்.

    இவர்கள் இருவரும் மும்பை மற்றும் கோவாவில் பணிபுரிந்தனர். நிலோத்பால் ஆடியோ என்ஜினீயராகவும், அபிஜீத்நாத் டிஜிட்டல் நிபுணராகவும் பணிபுரிந்தனர்.

    இவர்கள் இருவரும் கர்பி மலையில் உள்ள பஞ்சூரி சாரிகான் என்ற கிராமத்துக்கு சென்று இருந்தனர். அங்கு காரை நிறுத்தி வழி கேட்டனர். அவர்களை குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் என கிராம மக்கள் சந்தேகப்பட்டனர். எனவே அவர்களது காரை சுற்றி வளைத்தனர்.

    பின்னர் அவர்கள் இருவரையும் காரில் இருந்து வெளியேற்றினர். அவர்களை ரோட்டில் ‘தரதர’ வென இழுத்துச் சென்று கடுமையாக தாக்கினர். இதனால் ரத்த வெள்ளத்தில் துடித்த அவர்கள் நாங்கள் குழந்தை கடத்தும் கும்பல் அல்ல. அசாமை சேர்ந்தவர்கள்தான் என மன்றாடினர்.

    இருந்தும் விடாமல் சுமார் 250 பேர் கொண்ட கும்பல் தொடர்ந்து தாக்கியது. தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். கும்பலிடம் இருந்து 2 பேரையும் மீட்டனர். அவர்களில் ஒருவர் அதே இடத்தில் உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மற்றொருவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்துள்ளனர். இந்த தகவலை கர்பி ஆஸ்லாஸ் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜி.வி. சிவபிரசாத் தெரிவித்தார்.

    இத்தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த அசாம் முதல் மந்திரி சர்பானந்தா கோனோவால் உத்தரவிட்டுள்ளார். மேலும் சமூக வலை தளங்களை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார். #childkidnappingpanic 

    தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் குழந்தை கடத்தல் பீதியில் 4 பேர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஐதராபாத்:

    தமிழகத்தில் வடமாநில குழந்தை கடத்தல் கும்பல் புகுந்து இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது.

    குழந்தை கடத்தல் பீதியில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த ருக்மணி என்பவர் கிராம மக்களால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

    இதே போல் பழவேற்காட்டில் மனநோயாளி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு உடல் பாலத்தில் தூக்கி தொங்க விடப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    தற்போது தமிழகத்தில் ஓய்ந்து உள்ள குழந்தை கடத்தல் பீதி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகாவில் பரவி உள்ளது.

    கடந்த ஒரு வாரத்தில் 4 பேர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நேற்று குழந்தை கடத்த வந்ததாக நினைத்து ராஜஸ்தானை சேர்ந்த காலூராம் (வயது26) என்பவரை பொதுமக்கள் அடித்து கொலை செய்தனர்.

    பின்னர் அவரது கை, கால்களை கயிற்றில் கட்டி இழுத்து சென்றனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இது தொடர்பாக 4 பெண்கள், 2 சிறுவர்கள் உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பலரை தேடி வருகிறார்கள்.

    இதே போல் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 4 நாட்களில் குழந்தை கடத்தல் பீதியில்3 பேர் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    குண்டூர் மாவட்டம் ரேபல்லி பகுதியில் பெண் ஒருவர் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தார். இதே போல் கோதாகூடம் மாவட்டம் சரபக்கா பகுதியில் மனநலம் பாதித்த வாலிபர் தாக்கப்பட்டார்.

    நிசாமாபாத் மாவட்டம் போடன் பகுதியில் வாய்பேச முடியாத ஒருவரை மரத்தில் கட்டி வைத்து தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இந்தி பேசியதால் குழந்தை கடத்தல் பீதியில் அவரை பொது மக்கள் தாக்கி உள்ளனர்.

    தொடர்ந்து ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா பகுதியில் குழந்தை கடத்தல் பீதி தொடர்பான வீடியோக்கள் பரவி வருகின்றன. இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். #Tamilnews
    குழந்தை கடத்தல் பீதியில் சென்னை மூதாட்டியை கொன்ற 37 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களது காவலை மேலும் 15 நாட்களுக்கு நீடித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
    போளூர்:

    சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்த ருக்மணி (வயது 65) மற்றும் அவரது மருமகன் கஜேந்திரன் (45) உள்பட உறவினர்கள் 5 பேர், கடந்த 9-ந் தேதி போளூர் தண்ணீர்பந்தலில் உள்ள குல தெய்வ கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

    போளூருக்கு முன்புள்ள தம்புகொட்டான் பாறை கிராமத்தில் காரை நிறுத்தி வழி கேட்டனர். அப்போது, குழந்தை கடத்தும் கும்பல் என தவறாக எண்ணி கிராம மக்கள் கத்தி கூச்சலிட்டனர். எதற்கு ‘வம்பு’ நின்று காரை எடுத்து கொண்டு புறப்பட்ட அவர்களின் காரை களியம் கிராமத்தில் மடக்கினர்.

    காரில் இருந்த ருக்மணி உள்ளிட்ட 5 பேரையும் கீழே இழுத்து போட்டு கொடூரமாக தாக்கினர். காரும் அடித்து நொறுக்கப்பட்டது. இதில் மூதாட்டி ருக்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கஜேந்திரன் உள்பட மற்ற 4 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இச்சம்பவத்தில் அத்திமூர் மற்றும் களியம், தம்புகொட்டான் பாறை, கணேசபுரம், காமாட்சிபுரம், ஜம்பங்கிபுரம், இந்திராநகர், ஏரிக் கொல்லைமேடு, திண்டிவனம் உள்ளிட்ட 11 கிராமங்களை சேர்ந்த 117 பேர் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

    இவர்களில் 42 பேரை போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். கைது நடவடிக்கைக்கு பயந்து அத்திமூர், களியம் உள்ளிட்ட 11 கிராமங்களையும் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் குடும்பங்கள் வீடுகளை பூட்டி விட்டு வெளியூருக்கு தப்பி ஓடி விட்டனர்.

    இந்த நிலையில், வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்ட 42 பேரில், 37 பேரின் காவல் முடிந்ததையடுத்து, இன்று போலீஸ் பாதுகாப்புடன் 37 பேரும் போளூர் கோர்ட்டில் மாஜிஸ்திரேட் தாமோதரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    37 பேரின் காவலையும், மேலும் 15 நாட்களுக்கு நீடித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 37 பேரும் மீண்டும் வேலூர் ஜெயிலுக்கு அழைத்து வரப்பட்டு அடைக்கப்பட்டனர்.

    போளூர் அருகே குழந்தை கடத்தல் பீதியில் மூதாட்டி கொலை செய்யப்பட்டதில் கைது நடவடிக்கைக்கு பயந்து 11 கிராமங்கள் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
    போளூர்:

    சென்னை பழைய பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் ருக்மணி (65), இவரும் வெங்கடேசன் (வயது51). மயிலாப்பூர் கஜேந்திரன் (55) உறவினர் மலேசியாவை சேர்ந்த மோகன்குமார் (34) சந்திரசேகர் ஆகியோரும் காரில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே தண்ணீர் குளம் என்ற இடத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்றனர்.

    அப்போது தம்புகொட்டான் பாறை கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு ருக்மணி சாக்லெட் கொடுத்தார்.

    அங்கிருந்த பெண்கள், குழந்தையை கடத்த சாக்லெட் கொடுப்பதாக கருதி கூச்சல் போட்டனர். அங்கு திரண்ட கிராம மக்கள் ருக்மணி உள்பட 5 பேரையும் சரமாரி தாக்கினர். இதில் சிகிச்சை பலனின்றி ருக்மணி இறந்தார். மற்ற 4 பேரும் வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பொதுமக்கள் செல்போனில் எடுத்த வீடியோ ஆதாரத்தை வைத்து மூதாட்டி மற்றும் மற்றவர்களை தாக்கியவர்களை போலீசார் அடையாளம் கண்டனர்.

    அதன்படி தம்பு கொட்டான் பாறை, களியம் வேடகொள்ளை மேடு கிராமத்தை சேர்ந்த 25 பேரை கைது செய்தனர்.

    மேலும், சந்தேகிக்கப்படும் 200 பேரை பேலீசார் தேடி வருகின்றனர்.

    இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளை பூட்டிக் கொண்டு இரவோடு இரவாக தலைமறைவாகினர். கிராமத்தில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தது.

    அத்திமூர், கணேசபுரம், தம்புகொட்டான் பாறை, களியம், காமாட்சிபுரம், திண்டிவனம், இந்திராநகர், ஜம் பங்கிபுரம், தாளியார், காந்திநகர், ஏரிக்கொல் லைமேடு ஆகிய 11 கிராமங்கள் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. அந்த கிராமங்களில் போலீசார் முகாமிட்டு தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

    போளூர் பஸ் நிலையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களிலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பதுங்கி உள்ளனரா? என்று போலீசார் தேடி வருகின்றனர்.

    திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மேலும் 4 பேர் அபாய கட்டத்தை கடந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    மாவட்டத்தில் குழந்தை கடத்தல் கும்பல் எதுவும் ஊடுருவவில்லை. பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது சைபர் கிரைம் போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    வேலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் ஆய்வு செய்ததில் குழந்தை கடத்தல் கும்பல் மாவட்டத்தில் எங்கும் இல்லை.

    குழந்தை கடத்தல் கும்பல் என்று சமூக வலை தளங்களில் பொய்யான தகவல்களை பரப்பினால் அவர்களும் குற்றவாளிகளாக கருதி குண்டர் சட்டம் அல்லது அதற்கு நிகரான வழக்கில் கைது செய்யப்படுவார்கள்.

    மேலும், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படும் என்றார்.

    ×